வைரஸ் என்பது பாக்டீரியாவை விட மிகவும் சிறிய ஒரு உயிரினம். வைரஸ்களுக்கு தனியாக செல் அமைப்பு கிடையாது. எனவே வேறு உயிரினங்களின் செல்களில் தான் வைரஸ்கள் இனவிருத்தி செய்ய முடியும். மனித செல்களில் வைரஸ்கள் பல்கிப் பெருகும்போது வளர்சிதைமாற்ற செயல்கள் பாதிக்கப்பட்டு அது நோய் அறிகுறியாக வெளிப்படுகிறது. அம்மை நோய் சாதாரண தடுமன் ஆகிய நோய்களினால் ஏற்படும் வைரஸ் நோய்கள் பொதுவாக பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்தே மற்றவர்களுக்கு பரவுகின்றன. சில வைரஸ் நோய்கள் பாதிக்கப்பட்ட விலங்குகளின் மூலம் மனிதர்களுக்குப் பரவுகின்றன.
வைரஸ் நோயை குணப்படுத்த அதிகமான மருந்துகள் இல்லை. பொதுவாக வைரஸ் நோய் வந்த பிறகு அதை குணப்படுத்துவதற்கு என்று பொதுவான சிகிச்சை எதுவும் இல்லை என்றே கூறலாம். ஆனால் வைரஸ் நோய் வருமுன்னர் உடலில் அந்த வைரஸை எதிரான எதிரிகளின் உற்பத்தியை தூண்டுவதன் மூலம் வைரஸ் நோய் வருமுன் தடுக்கலாம். தடுப்பு மருந்து அதற்கு உதவுகின்றன.
பொதுவாக "வார்ட்" என்று அழைக்கப்படும் வளர்ச்சி அல்லது நீட்சிகள் ஒரு வகை பிரத்தியேக வைரஸ்களால் ஏற்படுகின்றன. மனித தோலில் மட்டும்தான் இந்த வைரஸ்கள் வளர்கின்றன. எனவே பாதிக்கப்பட்ட மனிதர்களின் மூலம்தான் இது மற்றவர்களுக்கு பரவுகிறது. தோலில் ஏற்படும் நுண்ணிய காயங்களின் வழியாக இந்த வைரஸ் நுழையும் பகுதியில் பலவித வளர்ச்சி அல்லது நீட்சிகள் ஏற்படுகின்றன
இந்த வைரசினால் ஏற்படும் வளர்ச்சி அல்லது நீட்சிகள் கடினமானவையாக பொதுவாக தோலின் நிறத்திலேயே இருக்கும். சில சமயங்களில் அவை வேறு நிறத்திலும் இருக்கலாம். சில வகை வார்ட்கள் அல்லது வளர்ச்சிகள் தோலின் பரப்பில் சற்று உயர்ந்து திட்டுகள் போல காணப்படும். இதுபோன்ற வளர்ச்சிகள் பொதுவாக புறங்கையிலும் முகத்திலும் ஏற்படும்.
சில வகை வளர்ச்சிகள், விரலைப் போன்று நீண்டு காணப்படும். இது போன்ற நீட்சிகள் முகத்தில் ஏற்படும்.
உள்ளங்காலிலும் இது போன்ற வளர்ச்சி ஏற்படுவது உண்டு. இது பொதுவாக வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருக்கும். இதை கால் புற்று என்றும் கூறுவர். சில சமயங்களில் இந்த புற்றுகள் அதிக வலி உடையவனாக இருக்கும்.
தோலை எரிக்கக் கூடிய சில வேதிப்பொருட்களை அல்லது மின்சார வெப்பத்தைப் பயன்படுத்தி இந்த வளர்ச்சி அல்லது நீட்சிகளை எரிந்து விடுவது ஒன்றுதான் இவற்றுக்கு இப்போது உள்ள ஒரே சிகிச்சை. இந்த வளர்ச்சி அல்லது நீட்சிகளை எரிப்பதற்கு திரவ பினால் அல்லது அடர் டிரை குளோரோ அசெட்டிக் அமிலம் ஆகிய ஏதாவது ஒன்றுதான் இப்போது பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக ஊசியை இந்த திரவங்களில் ஏதாவது ஒன்றில் முக்கி அதை வளர்ச்சி அல்லது நீட்ச்சியின் மீது குத்துவர். அதனால் ஊசியின் முனையில் இருக்கும் திரவம் வளர்ச்சி நோய் பரவி அந்த திசுவை எரித்து அழித்து விடுகிறது. வளர்ச்சி பெரியதாக இருந்தால் ஊசியால் பல இடங்களில் குத்த வேண்டும். இவ்வாறு செய்தவுடன் அந்த வளர்ச்சி வெள்ளை நிறமாக மாறும். ஒன்று அல்லது இரண்டு தினங்களில் அது கருப்பு நிறமாக வேண்டும். பின்னர் ஒரு வாரத்துக்குள் அது நன்கு உலர்ந்து அடையாளம் இல்லாமல் உதிர்ந்து போய் விடும். இதுபோன்று சிகிச்சை அளிக்கும்போது எரிசாராயத்தை நனைத்த பஞ்சை கொண்டு புண்ணில் இருக்கும் அதிகப்படியான திரவத்தை உடனே துடைத்து எடுத்து விடவேண்டும். பொதுவாக இது போன்ற வளர்ச்சி அல்லது நீட்ச்சிகளை ஆரம்பத்திலேயே அழித்து விடுவதுதான் சிறந்தது. அப்போதுதான் அது வேறு பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்க முடியும். இன உறுப்புகளில் ஏற்படும் வறட்சியை நீக்க மருத்துவர்கள் வேறு பிரத்தியேக மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.
No comments:
Post a Comment