குளிர்காலத்தில் பனியினால் உண்டாகும் நோய்களும் அதனை போக்கும் வழிமுறைகளும் | Diseases caused by frost in winter and ways to get rid of it
குளிர் - பனிக்கடி
உடல் சருமம் கடுமையான வெப்பத்தால் பாதிப்புக்கு இலக்காவது போல கடுமையான குளிரும் உடல் சருமத்தை பாதிக்கும் இலக்காகும். சாதாரணமாக ஒருவர் அதிகமான குளிரில் அதிக நேரம் இருக்க நேர்ந்தால் உடைகளால் பாதுகாக்கப்படாத உடல் உறுப்புகள் குறிப்பாக மூக்கின் நுனி, காதுமடல், கைவிரல்கள் போன்றவை சட்டென குளிர்ச்சி அடைந்து விடுகின்றன.
இந்த பகுதிகளில் உள்ள ரத்தக் குழாய்கள் சுருங்கி இரத்த ஓட்டம் நின்று போகிறது. பின்னர் இவ்வாறு பாதிக்கப்பட்டவரை வெதுவெதுப்பான இடத்திற்கு கொண்டு வந்து குளிர்காய செய்யும் போது பாதிக்கப்பட்ட சருமத்தில் புண்கள் மற்றும் கொப்புளங்கள் ஏற்படும். அந்த பகுதிகளில் கடுமையான வலியும் இருக்கும். சில சமயங்களில் குளிரினால் பாதிக்கப்பட்ட சருமங்களில் ரத்த ஓட்டம் நின்று போய் அந்தப் பகுதிகள் இறந்துவிடுகின்றன.
இம்மாதிரி வேறு பல காரணங்களாலும் உடல் உறுப்புகளில் சில பகுதிகளில் ரத்த ஓட்டம் நின்றுவிடும் காரணத்தால் அந்தப் பகுதி அழுகிவிடுவதும் உண்டு. இத்தகைய நோய் நீண்ட நாள் இருக்க நேர்ந்தால் அந்த பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி விடுவது நல்லது.
சிலரால் சாதாரண குளிரைத் தாங்க முடிவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு குளிர்காலங்களில் கை விரல்களிலும் மேல் புறங்களிலும் சருமம் கருமை நிறம் அடைந்து நீர் வைத்துப் புண்கள் ஏற்படும். அந்த பகுதியில் அதிக வலியும் அதன் காரணமாக வேதனையும் இருந்து கொண்டே இருக்கும். தீவிரமான சிகிச்சை மேற்கொள்ளாமல் இந்த புண்கள் ஆறிவிடும். ஆனால் குளிர் காலம் முடியும் வரை இம்மாதிரி தொல்லைகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும்.
இத்தகைய மென்மையான உடல்வாகு பெற்றவர்கள் குளிர்காலத்தில் தங்கள் உடலைக் குளிர் தாக்காத வண்ணம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் வெந்நீரில் குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். குளிர் மிகுதியாக இருக்கும் சமயங்களில் கம்பளி உடைகளை அணிய வேண்டும். இயலுமாயின் கை கால்களின் விரல்களுக்கு பாதுகாப்பாக கம்பளி உறைகளை அணிந்து கொள்ளலாம். சாதாரண புண்களுக்கு உப்பு நீரில் துணியை நனைத்து ஒத்தடம் கொடுத்தால் போதுமானது.
No comments:
Post a Comment